• home
  • about
    • About Us
    • News
    • Executive Committee
    • Past Executive Committee Members
    • Membership Application Form
  • services
    • services - சேவைகள்
    • Projects - திட்டங்கள்
  • gallery
  • Literature
    • Short Story - சிறுகதை
    • Daram - நாடகம்
    • Poem - கவிதை
    • Social - சமூகம்
    • History - வரலாறு
    • Classical Tamil Literature - பண்டைத் தமிழ் இலக்கியம்
    • Tamil Intellectuals - தமிழ் அறிவுஜீவிகள்
  • Other
    • Festivals - பண்டிகைகள் 
    • Painting - ஓவியம் 
    • Music - சங்கீதம் 
    • Dance - நடனம்
    • Classical Photos - அபூர்வ புகைப்படங்கள்
    • Classical Recordings - அபூர்வ ஒலிப்பதிவுகள்
    • Cinema - சினிமா
HomeLiterature Poemsபிரமிள் கவிதைகள்

பிரமிள் கவிதைகள்

காவியம்



சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.


குமிழிகள்

இன்னும்
உடையாத ஒரு
நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது
கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர் மொக்கு


எல்லை

கருகித்தான் விறகு
தீயாகும்
அதிராத தந்தி
இசைக்குமா?
ஆனாலும்
அதிர்கிற தந்தியில்
தூசி குந்தாது.
கொசு
நெருப்பில் மொய்க்காது

(எழுத்து-1965)


பாலை



பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.
என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.

*
(1973)


ஸ்கூட்டரில் வந்த தோழர்


கால்நடைக்காரன் என்னை,
குறி, பார்த்து வந்தது
அவரது ஸ்கூட்டர்.
தோழர் அவர் எனக்கல்ல. எனவே
நின்றபடி ஓடும்
எஞ்ஜினுடன் ஓடவிட்டார்
இயங்கு இயல் வாதத்தை-
’நீ பூர்ஷ்வா
உன் அப்பன் பூர்ஷ்வா
உன் பாட்டன் முப்பாட்டன்
உன் பரம்பரை
பூராவும் பூர்ஷ்வா
பூ ஊ ஊ ஊர்ஷ் வாஹ்!’ என்றார்.
’நீ?’ என்றேன்.
’நானா?’ என்று
பிரேக்கை ரிலீஸ் பண்ணி
‘நான் ஒரு லெப்ட்…’ என்று
பள்ளத்தே பாய்ந்த
முன்சில்லைத் தூக்கி
‘டிஸ்ட்’ என்று எம்பினார்.
‘டூ’…என்றார் ‘டா’ என்றார்.
பறந்தார் ஸ்கூட்டரில்.
பள்ளம் பார்த்துப் பாதை பிடித்து
நடந்தேன் நான்.

*
(1986)


பிரமிள்
பிரமிள் (ஏப்ரல் 20, 1939 - சனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார்.[1] அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்

சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தர்மு சிவராம்[1] இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில், 1997இல் மறைந்தார்.

தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த எழுத்து பத்திரிகையில் கவிதைகளும் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளராகவே மதிக்கப்பட்டார். இலங்கை எழுத்துலகமும் இவ்வாறே இவரைக் கணித்து வந்துள்ளது.

புதுக் கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்தபட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமை படைத்திருந்தார்; இவரது ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. ‘படிமக் கவிஞர்’ என்றும் ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும்.

ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், விமர்சனக்கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள், நவீன தமிழ் இலக்கியம் குறித்துக் கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர்.

ஆரம்பக் கல்வி மட்டும் ராமகிருஷ்ணமடம் நடத்திய இரவுப்பாடசாலையில் கிடைத்தது. தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும், உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள். இளம் வயதிலேயே மெளனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்குண்டு.

"கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்" என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுத்துவில் எழுதினார். மைசூரிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை, கேரளக் கருத்தரங்கில் படித்த தமிழ்க்கவிதை பற்றிய இவரது கட்டுரை ஒன்றைக் கேட்டு வாங்கி வெளியிட்டது.

தொடக்கத்தில் எழுத்து- இதழும் இடையில் கொல்லிப்பாவை இதழும் இறுதியில் லயம் பத்திரிகையும் இவருக்கு முதன்மையான படைப்புக் களம் அமைத்துத் தந்தன. பிரமிளின் பெரும்பாலான நூல்கள் லயம் வெளியீடுகளாகவே பிரசுரம் பெற்றன.

நூல்கள்
(பதிப்பு : கால சுப்ரமணியம்)
1. பிரமிள் கவிதைகள். 1998. (முழுத் தொகுதி). (லயம்).
2. தியானதாரா. 1989 (லயம்), 2005 (ஆகாஷ்), (1999), (2006), 2008 (கவிதா).
3. மார்க்ஸும் மார்க்ஸியமும். 1999. பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). (லயம்).
4. பிரமிள் படைப்புகள். 2003. (அடையாளம்).
5. வானமற்றவெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்.2004. (அடையாளம்).
6. பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள். 2007. (வம்சி).
7. பிரமிள் கவிதைகள். 2007. (சிறப்புப் பதிப்பு). (அடையாளம்).
8. விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள். 2009. (விருட்சம்)
9. ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. 2009. (தமிழோசை).
10. யாழ் கதைகள். 2009. (லயம்).
11. காலவெளிக் கதை: அறிவியல் கட்டுரைகள். 2009. (உள்ளுறை).
12. வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள். 2011. (வம்சி).
13. வரலாற்றுச் சலனங்கள்: சமுதாயவியல் கட்டுரைகள். 2011. (வம்சி).
14. எதிர்ப்புச்சுவடுகள்: பேட்டிகள், உரையாடல்கள். (வெளிவராதது)
15. அறைகூவல்: இலக்கிய அரசியல் எழுத்துகள். (வெளிவராதது)
16. தமிழின் நவீனத்துவம்: எழுத்து கட்டுரைகள். 2011. (நற்றிணை)
17. சூரியன் தகித்த நிறம் (மொழிபெயர்ப்புக் கவிதைகள். 2011. (நற்றிணை)
18. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதையில்லாப் பயணம். 2014. தமிழினி
19. மார்க்ஸும் மார்க்ஸியமும் - பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). 2014. தமிழினி
18. பிரமிள் படைப்புகள்: தொகுதி 1 கவிதைகள். 2015. அடையாளம்
19. பிரமிள் படைப்புகள்: தொகுதி 2 கதைகள், நாடகங்கள். 2015. அடையாளம்
20. பிரமிள் படைப்புகள்: தொகுதி 3 விமர்சனக்கட்டுரைகள்-1. 2015. அடையாளம்
21. பிரமிள் படைப்புகள்: தொகுதி 4 விமர்சனக்கட்டுரைகள்-2. 2015. அடையாளம்
22. பிரமிள் படைப்புகள்: தொகுதி 5 பேட்டிகளும் உரையாடல்களும். 2015. அடையாளம்
23. பிரமிள் படைப்புகள்: தொகுதி 6. மொழிபெயர்ப்பு, அறிவியல் ஆன்மீகம். 2015. அடையாளம்
Canberra Tamil Assocaition Copyright © Canberra Tamil Assocition 2018 - 2024 .All rights reserved.
கான்பெரா தமிழ்ச் சங்கம்
P.O. BOX 44
Civic Square,
ACT 2608
Australia
E-mail: cta1983@hotmail.com.au
website templates